ஊட்டி துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் மாளிகையின் திடீர் விளக்கம்… பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவும் பாஜகவும் தங்கள் கூட்டணியை மீண்டும் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஊட்டியில் கூட்டியுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாடு, கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், மாநாடு தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து இன்று திடீர் விளக்கம் வெளியாகி உள்ளது.
என்ன நடந்தது..? திடீர் விளக்கம் ஏன்..? விரிவான பின்னணி தகவல்கள் இங்கே…
உச்சநீதிமன்றம் ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி தாமதிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்த பின்னணியில், வருகிற 25, 26, 27 தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாட்டைக் கூட்டி உள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த மாநாட்டுக்கு உச்ச நீதிமன்றத்தின் மசோதா தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும் அவர் அழைத்துள்ளார்.
இது குறித்த தகவல் வெளியானதுமே, ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. தமிழ்நாடு அரசுக்கு எதிரான மீறலாகவும், தங்களது கூட்டாட்சி பிரச்சாரத்துக்கு வலு சேர்ப்பதாகவும் இருப்பதாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வந்தன. இது, அரசியலமைப்பு மீறல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. ஷண்முகமும், ஒருங்கிணைந்த அரசியல் முயற்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர். முத்தரசனும் கண்டித்திருந்தனர்.
கவலை தெரிவித்த ஆர்எஸ்எஸ்
இது ஒருபுறம் இருக்க, ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) கட்சிகளுக்கும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கமலாலய வட்டாரத்திலும், தமிழக ஆர்எஸ்எஸ் வட்டாரத்திலும் கவலை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளுநர் ரவி, துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை இந்த மாநாட்டுக்கு அழைத்து, மாநில அரசின் மாநாட்டை எதிர்க்கும் வகையில் செயல்படுவது, திமுகவுக்கு அரசியல் ஆயுதம் தருவதாக அவ்வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. “ஆளுநரின் மாநாடு, மத்திய அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை நசுக்குவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, திமுகவின் கூட்டாட்சி நிலைப்பாட்டுக்கு ஆதரவை அதிகரிக்கச் செய்யும். இது, என்.டி.ஏ-வின் நம்பகத்தன்மையை பாதிக்கும்” என்று ஆர்எஸ்எஸ் தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாநில சுயாட்சி, நிதி-நிர்வாக சுதந்திரம் மற்றும் மத்திய அரசின் ஆதிக்கம் ஆகியவற்றில் திமுகவின் நிலைப்பாட்டையே தாங்களும் கொண்டுள்ளதாக அதிமுக தரப்பில் கூறப்படும் நிலையில், ஊட்டி மாநாடு அந்த கட்சியையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இந்த விஷயத்தில் இப்போது பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, இவற்றில் தெளிவான நிலைப்பாடு எடுக்க முடியாமல் தவிக்கிறது. மேலும் பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு, திமுகவுக்கு எதிரான அணியை பெரிதாக்க முயல்கிறது. ஆனால், ஆளுநரின் மாநாடு, இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பை சீர்குலைத்து, திமுக-வுக்கு எதிரான போராட்டத்தில் அதிமுக-பாஜகவை பலவீனப்படுத்தலாம் என ஆர்எஸ்எஸ் தரப்பில் டெல்லி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை விளக்கம்
இந்த பின்னணியில் தான், “தமிழ்நாடு அரசுடன் எவ்வித மோதலும் இல்லை. அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே மோதல் உள்ளதாக செய்திகள் வெளியாவது தவறு,” என்று ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு வருடமும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இந்த ஆண்டும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கின. மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. 2022 முதல் துணை வேந்தர் மாநாட்டை வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடத்தி வருகிறார். சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் தவறாக இணைத்து ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகார போராட்டமாக முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். இவை அனைத்தும் தவறானது. உண்மைக்கு புறம்பானது” என அதில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையின் இந்த திடீர் விளக்கம் டெல்லியில் இருந்து வந்த அறிவுறுத்தலின் பேரில் இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், இந்த மாநாட்டில் துணை வேந்தர்கள் கலந்துகொள்வார்களா இல்லையா என்பதை பொறுத்தே இதன் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்பது தெரியவரும்!