முதலமைச்சர் ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாள் விழா: அண்ணா சமாதி டு அறிவாலயம்… ஹைலைட்ஸ்!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 72 ஆவது பிறந்த நாள். அவரது பிறந்த நாளையொட்டி நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள் இங்கே…
தனது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, “இந்தி திணைப்பை எதிர்ப்போம்,மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.. அண்ணா வழியில் அயராது உழைப்போம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழங்கினார். பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு கோபாலபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிஐடி காலனிக்கு சென்று கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் மறைந்த முரசொலி செல்வம் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக, 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெறத் தொடங்கினார். நீண்ட வரிசையில் நின்று திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சருக்கு புத்தகம், பழங்கள், இனிப்புகள், வெள்ளி வாள் உள்ளிட்டவற்றை நினைவு பரிசாக தொண்டர்களும், கட்சி பிரமுகர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் வழங்கினர். திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் 250 கிலோ எடைகொண்ட பித்தளையில் செய்யப்பட்ட சிங்கம் சிலையை முதலமைச்சருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினர்.
ஜனாதிபதி, பிரதமர், ராகுல் காந்தி, ஆளுநர் வாழ்த்து
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ரவி , ” தாங்கள் இன்று தங்களுடைய 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழக மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்” என தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், அதில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை, ரஜினி, விஜய்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக பாஜக சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதலமைச்சருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் . சிதம்பரம், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாம தலைவர் அன்புமணி ராமதாஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிறந்த நாள் செய்தியும், உறுதிமொழியும்

முன்னதாக “தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும்எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம்!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என திமுக தொண்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “நேற்று நடைபெற்ற தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் நான் பேசும்போது கூட, மாநிலத்தில் சுயாட்சி வேண்டும், இந்தி திணிப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் தொடரும் என்பதுதான் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்து செய்தி.
நேற்று கட்சி தொடங்கியவர்கள் திமுக-வை பற்றி விமர்சிப்பது குறித்து எனக்கு கவலையில்லை. என்னுடைய கவலை எல்லாம் நாட்டைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் தான். மாநில உரிமையை நாம் பெற வேண்டும் என்பதை பற்றி தான் என்னுடைய கவலையுள்ளது” என தெரிவித்தார்.