2026 தேர்தலும் தமிழக பட்ஜெட்டும்… வெளியாகப் போகும் அறிவிப்புகள் என்ன?

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற மார்ச் 14 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு புதிய அரசு பதவியேற்ற பின்னரே 2026-2027 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
எனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அதன் தற்போதைய பதவிக்காலத்தில் தற்போது தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் தான் முழுமையான பட்ஜெட் ஆக இருக்கும். ஆதலால் இந்த பட்ஜெட்டில், 2026 தேர்தலுக்கு திமுக-வைத் தயார்படுத்தும் வகையில், மக்களைக் கவரக்கூடிய பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், 2021 ஆம் ஆண்டு தேர்தலின்போது திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில், இன்னும் சில நிறைவேற்றப்படாமல் உள்ளன. எனவே, அது குறித்த அறிவிப்புகள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக திமுக-வுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில், பெண்கள் ஆதரவை அதிகமாக பெற்றுக்கொடுத்ததில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கு அடுத்தபடியாக, பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படுமா?

எனவே இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்த திட்டத்தில் தகுதியிருந்தும் பயனாளிகளாக இருக்கவில்லை. அவர்களுக்காக விரைவில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிகபட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதேபோல் இப்போது புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாயை மேலும் அதிகரிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே தமிழக பாஜக தரப்பில், ” நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மகளிருக்கு 2,500 ரூபாய் வரை வழங்கப்படும்” என அக்கட்சியினர் பேசி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி தேர்தலில், மகளிருக்கு 2500 ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து தான் அக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. எனவே, 2026 தேர்தல் நெருக்கத்தில் பாஜக மட்டுமல்லாது அதிமுகவும் இதேபோன்ற வாக்குறுதியை அளிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அதனை சமாளிக்கும் வகையில், மகளிர் உரிமைத் தொகையை அதிகரிப்பது தொடர்பாகவும் அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கும் அறிவிப்புகள்
அடுத்ததாக திமுக-வின் முக்கிய வாக்கு வங்கியாக கருதப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உட்பட தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. எனவே, அவர்களை குளிர்விக்கும் விதமான சில அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.
இளைஞர்கள், தொழில் நிறுவனங்கள்
அதேபோன்று இளம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையிலான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. மேலும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களை ஈர்க்கும் வகையிலான அறிவிப்புகளும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பட்ஜெட்டுக்கான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நேற்று நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்தவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இன்று வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளுடனும், 20 ஆம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன் நடத்தும் ஆலோசனையின் அடிப்படையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.