தமிழக சட்டசபையில் இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
திமுக-வுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில், பெண்கள் ஆதரவை அதிகமாக பெற்றுக்கொடுத்ததில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்துக்கு அடுத்தபடியாக, பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது. எனவே, இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்த திட்டத்தில் தகுதியிருந்தும் பயனாளிகளாக இருக்கவில்லை. குறிப்பாக இப்போது புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்களும், தகுதி இருந்தும் பயனாளிகளாக இல்லாமல் உள்ளனர்.
இந்த நிலையில், பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறாலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இன்று தாக்கல் செய்யப்பட்ட 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டில் அது குறித்த அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், “மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது.
இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், ” ‘விடியல் பயணம்’ திட்டம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும்.
பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.