தமிழக சட்டசபை: ஆளுநரின் புறக்கணிப்பும்… அரசின் விளக்கமும்!

வ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அரசின் சாதனைகள், கொள்கைகள் அடங்கிய உரையை ஆளுநர் வாசிப்பார். ஆனால், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதில் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி. உரையாற்றும்போது, தமிழக அரசு வழங்கிய உரையில் சிலவற்றை நீக்கியும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் சொந்தமாக படித்த வரிகளை நீக்க அவையில் உடனடியாக தீர்மானம் கொண்டு வந்து திமுக அரசு நிறைவேற்றியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவையைவிட்டு வெளியேறினார். 2024 ஆம் ஆண்டும், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, உரையில் உண்மைத்தன்மை மற்றும் தார்மீக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, தமிழக அரசின் உரையை புறக்கணித்தார் அதன்பின் சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையை படித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு கூட்டத்தொடரிலும் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநர் வெளியேறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசின் விளக்கம்…

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் தான் ஆற்ற வேண்டிய உரையைப் புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது தொடர்பாக சட்டசபையில் இன்று விளக்கம் அளித்த மூத்த அமைச்சரான துரைமுருகன், “ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும் உரைக்கு பின்பு தேசிய கீதமும் பாடப்படும் என முன்னதாகவே விளக்கம் தரப்பட்டுள்ளது. கடந்தாண்டு சர்ச்சை எழுந்தபோதும் எழுத்துப்பூர்வமாக அவை நடவடிக்கை கூறப்பட்டும் ஆளுநர், உரையை புறக்கணித்தார். ஆளுநர் பதவி உள்ளவரை அப்பதவியில் இருப்பவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எனக் கருத்து கொண்டவர் முதலமைச்சர். தேசிய கீதத்தின் மீது பெரும் மதிப்பை தமிழக சட்டசபை கொண்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து ஆளுநர் உரையில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும் என்றும், வேறு எவையும் இடம் பெறாது என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

‘தேச பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகையா?’

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ” ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழக மக்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. பாரம்பரியமாக தமிழக சட்டசபையில் என்ன நிகழ்வுகள் நடக்குமோ, அதே நிகழ்வுகள் தான் தொடர்ந்து நடக்கிறது. அதனை மாற்ற வேண்டும் என்று கவர்னர் முயற்சிக்கிறார். அது நடக்காது என்பதாலும், உரையை கவர்னர் வாசித்தால், திமுக அரசின் சாதனைகளை அடுக்க வேண்டும் என்பதாலும், இந்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காகத் தான் அவர் இப்படி நடந்து கொண்டார்.

அமைச்சர் சிவசங்கர்

59 பக்கங்களில் அரசின் சாதனைகள் விரிவாக இருக்கிறது. அதனை படிப்பதற்கு தயங்கிக் கொண்டு தான், இன்று இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். கடந்த முறை, தமிழக தலைவர்களின் பெயர்களை சொல்லாமல் மறைத்த கவர்னர், இந்த முறை ஒட்டுமொத்த உரையையும் புறக்கணித்துள்ளார். தேசிய கீதம் பாடப்படவில்லை என அவர் காரணம் கூறியுள்ளார். தேச பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகை அவர்தான் என்பது போல் பேசுகிறார். தேசபக்தியில் தமிழக மக்களை மிஞ்சி, அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. தேசத்திற்காக தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This contact form is created using. Alquiler de yates con tripulación. En anden hest eller et socialt dyr som en ged kan være med til at give din hest selskab og reducere følelsen af ensomhed.