சட்டசபையிலிருந்து வெளியேறிய ஆளுநர் ரவி… 3 ஆவது ஆண்டாக சர்ச்சை… நடந்தது என்ன?

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கியது. அவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மூன்றே நிமிடத்தில் அவையிலிருந்து வெளியேறினார்.

அவை தொடங்கியது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் பேசத் தொடங்கும் சமயத்தில் அதிமுகவினர் அரசுக்கு எதிராகவும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அதே சமயம், ஆளுநர் ரவி முதலில் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று சொன்னார். ஆனால், மரபுப்படி முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, முடிவில் தான் தேசிய கீதம் பாடப்படும் என்பதால், அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆளுநர் தனது உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து கிளம்பிவிட்டார்.

காரணத்தைச் சொன்ன ஆளுநர் மாளிகை

இந்த நிலையில், ஆளுநர் வெளியேறியதற்கான காரணத்தை விளக்கி ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது மாண்புமிகு ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.

இன்று ஆளுநர் சட்டப்பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்” எனக் கூறப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளாக தொடரும் சர்ச்சை

ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடரிலிருந்து ஆளுநர் ரவிக்கும் அரசு தரப்புக்கும் மோதல் ஏற்படுவதும், அவையிலிருந்து ஆளுநர் வெளியேறுவதும் தொடர்ந்து இது மூன்றாவது ஆண்டாக நிகழ்ந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி. உரையாற்றும்போது, தமிழக அரசு வழங்கிய உரையில் சிலவற்றை நீக்கியும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் சொந்தமாக படித்த வரிகளை நீக்க அவையில் உடனடியாக தீர்மானம் கொண்டு வந்து திமுக அரசு நிறைவேற்றியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவையைவிட்டு வெளியேறினார். 2024 ஆம் ஆண்டும், ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, உரையில் உண்மைத்தன்மை மற்றும் தார்மீக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, தமிழக அரசின் உரையை புறக்கணித்தார் அதன்பின் சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையை படித்தார்.

இத்தகைய சூழ்நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு கூட்டத்தொடரிலும் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» kış saatine neden alışamıyoruz ?. Diversity of  private yachts for charter around the world. Hest blå tunge.