வேளாண்மைத் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகவும், விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தமிழக அரசு, வேளாண்மைத் துறை வளர்ச்சிக்காகவும் விவசாயிகள் நலன்களுக்காகவும் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளை விவரித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டுக்குப் பின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு 4,104 டிராக்டர்கள், 10,814 பவர் டில்லர்கள், 332 அறுவடை இயந்திரங்கள், 28,140 பிற விவசாயக் கருவிகள் உட்பட மொத்தம் 43,390 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.335.16 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
உழவர் சந்தைகள்
ரூ.27.5 கோடி செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ.2.75 கோடி செலவில் 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் உழவர்சந்தை புதுப்பொலிவுடன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021-2022 முதலாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம்-11.74 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது
குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம்
ரூ.187 கோடி ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால் 2021-ல் 4.90 லட்சம் ஏக்கரிலும், 2022ல் 5.36 லட்சம் ஏக்கரிலும் 2023ம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிசெய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர்.
நெற்பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்திட 4.41 லட்சம் ஏக்கருக்கு ரூ.12.96 கோடியில் துத்தநாகம் சல்பேட் மற்றும் ஜிப்சம் வழங்கப்பட்டு 4.50 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.29 கோடியில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2,99,725 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ரூ. 138/82 கோடி செலவில் பயறு பெருக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 5,67,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
தமிழ்நாட்டின் நிகர சாகுபடிப் பரப்பினை அதிகரித்திட 12,525 கிராம ஊராட்சிகளிலும் நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்றி ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடைந்திடும் நோக்கத்துடன் கலைஞரின்அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2021-22 ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் ரூ.610.52 கோடியில் 7,705 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு 23,281 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும் 4,487 ஏக்கர் பரப்பளவில் பழமரக் கன்றுகளும் நடவு செய்யப்பட்டு தரிசு நிலங்கள் நிரந்தரச் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 44,43,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப்பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது” எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.