கருத்துக் கணிப்பு கொடுத்த உற்சாகம்… திமுகவில் அரங்கேறும் அதிரடி மாற்றங்கள்!

வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 200 இடங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது திமுக தலைமை. அதற்கேற்றவாறு களப்பணியில் தீவிரம் காட்டப்பட வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளை, குறிப்பாக மாவட்டச் செயலாளர்களை வலியுறுத்தி வருகிறார் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்.
இதனிடையே, தமிழகத்தில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து இந்தியா டுடே- சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அக்கூட்டணியின் வாக்கு சதவீதம் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலை விட 5 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக தரப்பில் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்
இந்த நிலையில், கட்சி செயல்பாடுகளில் சுணக்கம் காட்டும் மற்றும் கோஷ்டி பூசலில் ஈடுபடும் நிர்வாகிகளால் 2026 தேர்தல் வெற்றி எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, நிர்வாகிகள் மட்டத்தில் களையெடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி, பல்வேறு மாற்றங்களை செயல்படுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
மேலும், தமிழக அரசியலுக்குப் புதிய வரவான நடிகர் விஜய்யின் தவெக பக்கம் இளைஞர்கள் செல்வதை தடுக்க, மாவட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் மட்டத்தில் இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கும், குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் கணிசமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் கட்சித் தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தலித், வன்னியர், சிறுபான்மை இன மற்றும் மொழி சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மாவட்டச் செயலாளர்கள் உட்பட திமுக-வின் பல்வேறு பிரிவுகளில் சிலர் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ., திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக பழனிவேல், நீலகிரி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.எம்.ராஜு ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதுபோலவே ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டப் பொறுப்பாளர்களாக அமைச்சர் சு.முத்துசாமி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் பி.மூர்த்தி, செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ, க.செல்வராஜ் எம்.எல்.ஏ., டாக்டர்.ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ., கோ.தளபதி எம்.எல்.ஏ., என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், கௌதமசிகாமணி, இல.பத்மநாபன், என்.தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு, அவர்கள் பொறுப்பிலான சட்டமன்றத் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்னும் தொடரும்…
இந்த நிலையில் இந்த மாற்றம் ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்து திமுக-வினருக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின், வரும் நாட்களில் மாற்றங்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
“சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுகாலமே இடையில் உள்ளதால் அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளையும் உடன்பிறப்புகள் எதிர்பார்க்கக்கூடும்.

கழகத்தின் நன்மை கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கழகத்தின் நலன் கருதி இத்தகைய முடிவுகள் தொடரும். முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து, மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர், கிளைக் கழகங்கள் வரை எல்லாரையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றிட வேண்டும்.
200 தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு.
நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே! மக்களின் ஆதரவு நம் பக்கமே! மக்களுக்குத் துணையாக நிற்போம்! கவனமாக உழைப்போம்! வெற்றி நமதே” என அதில் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.