2026 தேர்தலில் விஜய் ‘கேம் சேஞ்சரா..? – கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?

தமிழகத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஏறக்குறைய அனைத்து கட்சிகளுமே ஆயத்தமாகி வருகின்றன. இதில், ஆளும் கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரை அப்படியே தொடர்கிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட சில சிறிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்த நிலையில், ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்ற தேர்தலிலாவது வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அதற்கான காய் நகர்த்தலில் ஈடுபட்டார். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை வளைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக தரப்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அதற்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. அதே சமயம் பாஜக தரப்பிலோ அதிமுகவை கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க திரைமறைவு வேலைகள் நடப்பதாக செய்திகள் வெளியாயின. அதாவது, ஓ.பன்னீர் செல்வம், தினகரன் மற்றும் சசிகலா போன்ற அதிமுகவில் இருந்து பிரிந்திருப்பவர்களை அக்கட்சியில் மீண்டும் ஒன்றிணைத்து, கூட்டணி அமைக்க வேண்டும் என பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே. ஏ. செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சமீபத்தில் எழுப்பிய கலக்குரல், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் பிறபித்த உத்தரவு ஆகியவை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பாஜக-வின் நிர்பந்தத்துக்கு இணங்கியாக வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.
இன்னொருபுறம் தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கி விட்டார். இதில், சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி அக்கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூனா முயற்சியின் மூலம், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் விஜய்யுடன் நடத்திய ஆலோசனை குறித்து பரபரப்பாக செய்தி வெளியானது. தவெக-வைப் பொறுத்தவரை விஜய் தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அக்கட்சி வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவது என்ற நிலையிலேயே உள்ளது.
கருத்துக் கணிப்பு சொல்வது என்ன?
இத்தகைய அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து இந்தியா டுடே- சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.

சரியாத திமுக வாக்குகள்
இந்த கருத்துக் கணிப்பின் முக்கிய அம்சமாக தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இப்போது தேர்தல் நடந்தால், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலை விட 5 விழுக்காடு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிந்த போன அதிமுக வாக்குகள்
இதில் 2021 ல் திமுக-விடம் ஆட்சியை இழந்து, 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தொடர் தோல்வியை சந்தித்து வரும் அதிமுக-வின் வாக்கு சதவீதம் 23 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக-வுக்கு முன்னேற்றம்
அதே சமயம், . 2024 தேர்தலில் 18 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக-வின் வாக்கு சதவீதம் அதிகரித்து 21 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் கேம் சேஞ்சராக வாய்ப்பு
இந்த நிலையில், தமிழக அரசியல் களத்துக்குப் புதிய வரவாக இருக்கும் நடிகர் விஜய்யின் தவெக மாநில அரசியலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தேசிய அளவில் அவரது செல்வாக்கு குறைவாகவே இருந்தாலும், சட்டமன்ற தேர்தல் அளவில் அவருக்கான ஆதரவு 10 முதல் 15 சதவீதம் வரை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேசிய அளவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக-வுக்கு திமுக தொடர்ந்து சவாலாகவே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், அதிமுக – தவெக ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அது தமிழக அரசியலில் ஒருவேளை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இதில் விஜய் கட்சி ‘கேம் சேஞ்சராக’ இருக்கும் என்றும் கூறுகிறார்கள் இந்த கருத்துக் கணிப்பை நடத்திய இந்தியா டுடே- சி வோட்டர் குழுவில் இடம்பெற்ற அரசியல் நிபுணர்கள்.