அதிமுக – பாஜக கூட்டணி: இறங்கி வரும் எடப்பாடி … ‘சிக்னல்’ கொடுத்த அண்ணாமலை!

தமிழக அரசியலில், தற்போதைக்கு திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. திமுக மீது சில வருத்தங்கள், கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணியை விட்டு விலக மாட்டோம் என்றும், 2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிப்போம் என்றும் அதில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் உறுதிபட கூறி வருகின்றன.
குறிப்பாக, விலகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்து உள்ளன. இதனால், வரவிருக்கும் தங்கள் தலைமையிலான கூட்டணியே ஆட்சியமைக்கும் என திமுக திடமாக நம்புகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்தியா டுடே – சி வோட்டர் கருத்துக்கணிப்பில் கூட, இப்போது நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தாலும் தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது திமுக தரப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
ஐந்து முனை போட்டி
மேலும், தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை 2026 தேர்தல் வரை நீடித்தால் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் மற்றும் விஜய் தலைமையிலான தவெக என ஐந்து முனை போட்டி ஏற்படும். அப்படியான ஒரு நிலை உருவானால், ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும். எனவே திமுகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
தவெக-வை வளைக்க முயன்ற எடப்பாடி
இந்த நிலையில், 2026 தேர்தலில் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்றால் கூட்டணி பலம் தேவை என உணர்ந்துகொண்ட அதிமுகவும், தவெக உடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வந்தது. அதற்காக அதிமுக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இது தொடர்பாக இருதரப்புக்கும் பொதுவானவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பதில் தான் பிரச்னையே எழுந்ததாகவும், இதனால் கூட்டணி அமைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டு, அந்த முயற்சி வெற்றி பெறாமல் போனதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தான், இது நாள் வரை தவெக-வை பெரிய அளவில் விமர்சிக்காமல் இருந்து வந்த அக்கட்சி விமர்சிக்கத் தொடங்கிவிட்டது.
அதிமுகவை நெருக்கும் பாஜக
இந்த நிலையில், அதிமுக-வை மீண்டும் தங்களுடன் கூட்டணிக்கு இழுக்க டெல்லி பாஜக மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டணிக்கு ரொம்பவும் முரண்டு பிடித்தால், அதிமுக தலைமை பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை அகற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக தங்களுக்கு இணக்கமான ஒருவரை அப்பதவிக்கு கொண்டு வரவும் பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்த வகையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக அண்மையில் கலக்குரல் எழுப்பியது கூட அந்த செயல்திட்டத்தின் ஒரு அம்சமே என்று தமிழக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
மேலும், அண்மையில் சிவராத்திரியையொட்டி கோவை ஈஷா மையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தபோது, அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி நெருக்கம் காட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற வேலுமணியின் இல்ல திருமணத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்பட பாஜக-வினர் ஏராளமானோர் கலந்துகொண்டதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது.

வேலுமணியைப் பொறுத்தமட்டில் அவர், எடப்பாடி முதலமைச்சராக ஆனதிலிருந்தே டெல்லி பாஜக மேலிடத்துடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். அத்துடன் பாஜக- அதிமுக கூட்டணி முறிவுக்குப் பின்னரும் கூட, பாஜக-வுக்கு தேர்தல் பிரசாரம் போன்றவற்றுக்கு மறைமுகமாக உதவியதாக சொல்லப்பட்டதுண்டு. மேலும் அதிமுக தலைமை பதவிக்கு எடப்பாடிக்குப் பதில் வேறு ஒருவரைக் கொண்டு வரும் சூழ்நிலை உருவானால், அதில் வேலுமணியின் பெயரும் டெல்லி பாஜக மேலிடத்தின் பட்டியலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவையெல்லாம் எடப்பாடிக்கும் தெரியாமல் இல்லை. அதனாலேயே அவர் வேலுமணி இல்ல திருமண விழாவுக்கு தான் வராமல், தனது குடும்பத்தினரை மட்டுமே அனுப்பி வைத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறங்கி வரும் எடப்பாடி
இந்த நிலையில் தான் வலுவான திமுக கூட்டணி, கூட்டணிக்கு மறுக்கும் விஜய், அதிகரிக்கும் பாஜக-வின் நெருக்கடி போன்றவற்றால் எடப்பாடி பழனிசாமியிடம் மனதளவில் மாற்றம் ஏற்படத் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக 2026 தேர்தலில் திமுகவுக்கு எதிரான வாக்குகளை சிதற விடாமல் ஒன்றிணைத்தால் தான் அதிமுகவுக்கான வெற்றி சாத்தியம் என உணர்ந்துள்ளார். மேலும், பாஜக உடன் கூட்டணி அமைக்க முன்வராத பட்சத்தில், அது தனது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும் என்பதால் அவர் இறங்கி வர தீர்மானித்து விட்டதாக தெரிகிறது.
அதன் வெளிப்பாடு தான் அவர் இன்று சேலம், ஆத்தூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து எனலாம். பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, “எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான். வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டும் என்றுதான் எங்களது குறிக்கோள். ஓட்டுக்கள் சிதறாமல் ஒருங்கிணைந்து திமுகவை வீழ்த்துவது தான் அதிமுகவின் தலையாய கடமை. இது 2026 தேர்தலில் நடக்கும். யார் யார் அங்கு இருக்கிறார்கள், இங்கே இருக்கிறார்கள் என ஆறு மாதத்திற்கு பிறகு தான் கூற முடியும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது” எனப் பதிலளித்தார்.

அண்ணாமலை கொடுத்த ‘சிக்னல்’
இந்த நிலையில், கடந்த காலத்தில் அதிமுக உடனான கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக கருதப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் டெல்லி மேலிடம் கண்டித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவரும் அதிமுக கூட்டணிக்கு இணக்கமாகவே இருக்கிறார். அதன் ஒரு அம்சமாகவே இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, ” யாரும் எங்களுக்கு எதிரி அல்ல. மத்திய அமைச்சர் அமித்ஷா 2 நாட்களில் தமிழகம் வருகிறார். அவர் தமிழகம் வரும் போது இன்னும் பல மாற்றங்கள் நிகழும்” எனப் பதிலளித்தார்.
இதை வைத்து பார்க்கும்போது, அமித் ஷாவின் தமிழக வருகைக்குப் பின்னர் அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் எனத் தெரிகிறது.