Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

திருவள்ளூர்: சோழர் கால கோயில் செப்பேடுகள் சொல்லும் சுவாரஸ்ய தகவல்!

மிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் மூலம் பல்வேறு அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அம்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில், ஆதித்த கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோயிலில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இக்கோயில், இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், சிங்கீஸ்வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனையில் ஈடுபட்டார்.

அச்சோதனையில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் முத்திரையை கொண்ட வளையத்தில் இணைக்கப்பட்ட இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த செப்பெடுகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

சம்ஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்து வடிவில் தகவல்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டிருந்ததால், அதன் ஒளிப்படங்களை கர்நாடகா மாநிலம்- மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவுக்கு மாவட்ட தொல்லியல் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, செப்பேடுகளின் ஒளிப்படங்களை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவின் இயக்குநர் கே.முனிரத்தினம், “சிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகள், 1513 ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பிராமணர்களுக்கு அரசரால் ‘கிருஷ்ணராயபுரா’ என மறுபெயரிடப்பட்ட வாசல பட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன. இரண்டு செப்பு இதழ்கள் ஒரே வளையத்தில் கோக்கப்பட்டுள்ளன. அதில் கிருஷ்ணதேவராயரின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த செப்பேடுகளின் முழு விவரங்களை அறிய விரைவில் இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப் பிரிவினர், மப்பேடு சிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்ய உள்ளதாக மாநில தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version