தக் லைஃப்: மணி ரத்னத்துடன் மீண்டும் இணைந்தது ஏன்… கமல் வெளியிட்ட தகவல்!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீடு , பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கமல், “இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இப்போது பேசுறேன். இது அரசியல் கிடையாது. தமிழனின் யதார்த்தம். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம். இதை 2000 வருஷமாக செய்றோம். இன்னைக்கு வெவ்வேறு பகுதிகள்ல இருந்து வந்திருக்காங்க. அபிராமி 11 வயசுல நடிக்க வந்ததாக சொன்னாங்க.. பக்கத்துல த்ரிஷா இருக்காங்கனு பார்த்து சொல்லியிருக்கலாம்.
இப்போதும் மணி சாருக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் ‘நாயகன்’ மற்றும் ‘தக் லைஃப்’ திரைப்படங்கள். வியாபாரக் கணக்குல சிலரைப் படதுக்குள்ள கொண்டு வருவாங்க. மக்கள் முடிவுக்கும் விருப்பதுக்கு விநியோகஸ்தர்கள் தலை வணங்குவாங்க. அப்படிதான் புதிய திறமைகள் வர்றாங்க. அப்படிதான் சிம்பு வந்தாரு. அவங்க அப்பா வந்தாரு. இயக்குநர் பெயர் வெறும் மணி ரத்னம் கிடையாது. 5.30 மணி ரத்னம். சரியாக அத்தனை மணிக்கு வந்திடுவார்.
இரவு முழுக்க அதே நினைப்போடா இருந்தால்தான் அலாரம் இல்லாமல் வரமுடியும். ‘நாயகன்’ படத்துல இருந்தே அவருக்கு இந்தப் பழக்கம் இருக்கு. இந்த விஷயத்துல அவர்கிட்ட நான் பாலசந்தரைப் சாரை பார்த்தேன்” என்றார்.

தொடர்ந்து தனது உரையின்போது, மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்ததற்கான காரணத்தை கமல் வெளிப்படுத்தினார். “நாங்கள் ஒன்றாக இருப்பதற்கு நீங்கள்தான் ( ரசிகர்கள் தான் ) காரணம்,” என்ற அவர், ” ஆம், பார்வையாளர்களின் வேண்டுகோளே தன்னை மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற வைத்ததாக கூறினார். மேலும்,”இது ஜனநாயகக் கலை, அதில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல திறமைகள் வரும்போது, அவை வெளிப்பட அனுமதிப்போம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” டி.ஆருக்கு என் மேல அளப்பரிய பிரியம். எனக்கு ஒன்னுணா ஓடி வந்திடுவார். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்ங்கிற மாதிரி சிம்புவும் குறையாமல் பாசம் காட்டினார்.
இன்னைக்கு பலரும் எழுத நினைக்கிறார்கள். அது தவறு கிடையாது. ஆனால் ஒருங்கிணைந்து செயல்படுவதே முக்கியம். நான் முன்னாடி சொன்ன கதை பிடித்திருந்ததாக மணி சொன்னாரு. அந்த கதையிலிருந்து இன்ஸ்ஃபயராகி அவர் களத்துல பயணிச்சிருக்கார். பெண்ணை கொடுத்தாச்சு. மாப்பிளை அவரு. குழந்தை எப்படி வருதுன்னு பார்க்கணும்.
மணிரத்னம் முதல் முறையாக ராஜ் கமல் நிறுவனத்துல படம் பண்ணியிருக்கார். இந்தப் படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள் அதனால்தான் இந்த நம்பிக்கை. நான் இப்போது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தால்கூட சினிமா பற்றிதான் பேசுவேன். நீங்க கேட்கிற எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனா, வேற மாதிரி இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.