சர்வதேச தரத்தில் தயாராகும் தூத்துக்குடி விமான நிலையம்… வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை!
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தைதான் அணுக வேண்டிய தேவை இருக்கிறது. இந்த விமான நிலையத்தில் தற்போது உள்நாட்டு விமான சேவைகள் மட்டுமே நடந்து வருகின்றன.
தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் ஐந்து முறையும், தூத்துக்குடி-பெங்களூரு இடையே தினமும் 2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதன் மூலம், சர்வதேச விமானங்களும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து செல்ல முடியும்.தூத்துக்குடியில் ஏற்கனவே ஸ்பிக், கனநீர் ஆலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலை உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைய உள்ளதால், வரவிருக்கும் நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. அதே சமயம், இம்மாவட்டத்தில் ஏற்கெனவே ரயில், கப்பல், விமானம் என அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
இந்த நிலையில், அதிகரித்து வரும் எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டு, தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . ரூ.227 கோடி செலவில் புதிய முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் புதிய முனையத்தில் கட்டுப்பாட்டு கோபுரம், தீயணைப்புத்துறை கட்டடம் , விமானப் போக்குவரத்து கண்காணிப்பு ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இங்கு ஒரே நேரத்தில் ஐந்து விமானங்களை நிறுத்தும் வசதி, விஐபி அறைகள், லிஃப்ட் வசதி, ஒரு மணிநேரத்துக்கு 1400 பயணிகளை கையாளம் வசதி உள்பட அதிநவீன தரத்தில் விமான நிலையம் தயாராகி வருகிறது. விமான முனைய கட்டடங்களில் சூரியமின் சக்தி விளக்குகள் பொருத்தப்படுகின்றன.
இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று அக்டோபர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 113 கோடி செலவில் விமான ஓடுதளம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதன் வாயிலாக 250 பேர் பயணிக்கும் ஏ321 ரக ஏர் பஸ் விமானம் வந்து செல்ல வசதி செய்யப்படுகிறது.
இத்திட்டத்திற்காக தமிழக அரசு 106 ஏக்கரை கையகப்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த டார்மட் நிறுவனத்தால் ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படுகிறது. 17,341-ச.மீ. அளவில் புதிய முனைய கட்டடம் அமைய உள்ளது.தற்போதுள்ள முனையம் சுமார் 1,000 சதுர மீட்டர் மட்டுமே.
ஓடுபாதை 3,115 மீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக (3,611 மீ.) மாநிலத்தின் இரண்டாவது நீளமானதாக இருக்கும். புறப்படும் பக்கத்தில் நான்கு நுழைவு வாயில்கள் இருக்கும், 21 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் தரை மட்டத்தில் ஏழு எக்ஸ்ரே பேக்கேஜ் ஸ்கேனர்கள் இருக்கும்.
இந்தப் பணிகள் முடிந்த பின்னர், ஹைதராபாத், மும்பை, குஜராத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை துவங்கப்படும். இதன் மூலம் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி புதிய உச்சத்துக்கு செல்லும் சூழல் ஏற்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.