தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் குவிந்த பக்தர்கள் ‘ கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா…” என்ற பக்தி முழக்கங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
உச்சிகால தீபாராதனைக்கு பின்னர், சுவாமி அலை வாயு கந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்குப் பின்னர், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அறுபடைவீடுகளில் 3 ஆவது படைவீடான பழனி மலை முருகன் கோயிலில் தைப்பூசத்திருவிழா கோலாகலமாக கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோயில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி முருகன் கோயில்களில் இன்றுகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். வடபழனி முருகன் கோயிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோயில் வீதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வடலூர் சத்திய ஞான சபை

கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. தைப்பூசத்தையொட்டி இன்று காலை ஏழு வண்ண திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, மற்றும் கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர்.
தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறுவதோடு, நாளை புதன்கிழமையும் காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.