நெல்லையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய சோலார் தொழிற்சாலை… 4,000 பேருக்கு வேலை!

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி மாவட்டம் வந்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற 2 நிகழ்ச்சிகளில், முதலாவதாக 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ள டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார்.
இது இந்தியாவிலேயே மிகப் பெரிய சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலை ஆகும். இந்த ஆலை மூலம் 4,000 பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இதில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இரண்டாவது நிகழ்ச்சியாக 2, 574 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இவற்றிலும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவையே ஆகும்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, முதலமைச்சர் தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

அதிக திறன் கொண்ட சோலார் பிவி உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற விக்ரம் சோலார் நிறுவனம், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் இதன் ஆலை 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டுபேசிய டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன், டாடா பவரின் சூரிய மின் உற்பத்திப் பிரிவும், டாடா பவர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் துணை நிறுவனமுமான டிபி சோலார் லிமிடெட் நிறுவனமும் தற்போதுள்ள 4.3 ஜிகா வாட் (GW) திறனை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

டாடா பவர் நிறுவனம், 2026 ஆம் நிதியாண்டு முதல் 2030 ஆம் நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அதன் செயல்பாட்டு திறனை 15.6 ஜிகாவாட்டிலிருந்து 32 ஜிகாவாட் ஆக இரட்டிப்பாக்க சுமார் ரூ.1.25 டிரில்லியன் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்த நேரத்தில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.