பெண்களுக்கான இலவச பேருந்து பயண சேவை அதிகரிப்பு… தமிழக அரசு முடிவு!

தமிழ்நாட்டில் பெண்கள் மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்கான ‘விடியல் பயணம்’ என்ற திட்டம், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் அமலுக்கு வந்தது.
“இந்த திட்டத்தின் மூலம் இல்லத்தரசிகள், முறைசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பயன்பெற்று வருகின்றனர். சராசரியாக பெண் ஒருவருக்கு மாதம் ரூ.800 சேமிக்க முடிகிறது, இந்த பணம் அவர்களது குடும்பத்திற்கு சத்தான உணவுகளை வாங்குவது முதல் பல அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது” என ஆய்வறிக்கையை மேற்கோள்காட்டி தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சுமார் 482.34 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டதாகவும், பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி படிக்கும் மாணவியர் ஆகியோர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த இலவச பயணத் திட்டத்தின் கீழ் இதுவரை 29.12 லட்சம் இலவச பயணங்களை திருநங்கைகள் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. தொடர்ந்து மகளிர் இலவச பயணத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1,600 கோடி வரை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை நாள்தோறும் 3,232 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உள்ளது. இந்த நிலையில், சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், “சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருவாய் குறைவான பேருந்துகள் விடியல் பயணத்திற்கு மாற்றப்பட உள்ளது.

174 மாநகரப் பேருந்துகள் (சிவப்பு நிற எக்ஸ்பிரஸ் பேருந்துகள்) விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக மாற்றப்பட உள்ளது. பயணியர் எண்ணிக்கையும், வருவாயும் குறைவாக உள்ள வழித்தட பேருந்துகள் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்றம் செய்யப்படுகிறது. மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்றப்பட்ட பின்பு ஏற்கனவே இயங்கும் வழித்தடத்தில் இயக்காமல், கூட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில் தேவைக்கேற்ற வழித்தடங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் பேருந்துகளில் பெண் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடியல் பயணத்திட்டப் பேருந்துகளின் பயணியர் எண்ணிக்கையில் பெண் பயணியர் எண்ணிக்கை சராசரியாக 63 விழுக்காடாக உள்ளது” என மேலும் தெரிவித்தனர்.