Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்மேற்குவங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவும் வாய்ப்பு இருப்பதால், நாளை ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து வருகிற 15 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும், தெற்கு, உள் மாவட்டங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரையிலும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11 ஆம் தேதியன்று கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 12 ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

13, 14 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக வரும் 13 ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோன்று 14 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 14 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version