தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். நேற்று தமிழகத்தில் மதுரையில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. மேலும் சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நேற்றுதான் 102 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும் என்றும், சென்னையில் 2 நாட்களுக்கு 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழையின் தாக்கம் செப்டம்பர் மாதம் இலேசாக இருக்கும் என்பதால், அந்த மாதத்தில் வெப்ப நிலை இந்த அளவுக்கு உயர்ந்து காணப்படாது. ஆனால், இந்த முறை தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரித்ததற்கான காரணத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி, மேற்கு வங்கத்தில் கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி செல்கிறது. இது, ராஜஸ்தான் வரை சென்று படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. ஆனால், தென் மாநிலங்களில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.
தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 105 டிகிரி பாரன்ஹீட்; அதாவது 40.6 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம்.
தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு, அதாவது வருகிற 21 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. அதே சமயம், மேற்கு திசை காற்றின் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வெப்ப நிலை அதிகரிப்பால், தமிழ்நாட்டில் தினசரி மின் நுகர்வு அதிகரித்துள்ளது. வீடுகளில், ‘ஏசி’ சாதன பயன்பாடு பகலிலும் அதிகரித்துள்ளதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மின் நுகர்வு 36.94 கோடி யூனிட்களாக அதிகரித்ததாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.