Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

ஜவுளி ஏற்றுமதி: கொங்கு மண்டலத்தில் உருவாகும் புதிய தொழில் வாய்ப்புகள்!

ர்வதேச ஜவுளி சந்தைகளின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி அவசியம் என, பல்வேறு நாடுகளும் உணர்ந்துள்ளன.

மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டில், தொழில்நுட்ப ஜவுளி என, 207 வகையான பொருட்களை அறிவித்தது. அவற்றில், 12 வகையான பொருட்கள், ஆயத்த ஆடை உற்பத்தி துறையைச் சார்ந்தது. மேலும், மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், தொழில்நுட்ப ஜவுளித்துறைக்கு பிரத்யேக கவுன்சில் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளிகளின் உற்பத்தி மற்றும் அவற்றிற்கான முதலீடுகளை ஜவுளி நிறுவனங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்க ‘தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம்’ செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு ஜவுளி தொழில்துறையினரிடையே வரவேற்பு காணப்பட்டது. இதன் வாயிலாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்துப் பேசும் அவர்கள், ” மத்திய, மாநில அரசுகளின், தொழில்நுட்ப ஜவுளி மேம்பாட்டு திட்டங்களால், புதிய தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல் கிடைக்கும். நிதி ஆதாரங்களும் உருவாக்கப்படும்.

மருத்துவர் மற்றும் செவிலியர் சீருடை, படைவீரர்களுக்கான சீருடை, விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆடைகள், பொறியியல் தொழில்நுட்ப பணியாளர் சீருடைகள், கப்பல் பணியாளர் சீருடை என, பல்வேறு வகையான தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசு திட்டத்துடன், தமிழக அரசின் திட்டமும், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்.

தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியைப் பொறுத்தவரையில் ஈரோடு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில், ‘தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம்’ திட்டத்தினால், கொங்கு மண்டலத்தில் புதிய தொழில் வாய்ப்பு உருவாகும்” என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Exit mobile version