Amazing Tamilnadu – Tamil News Updates

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு… காரணம் என்ன?

ள்ளிக்கல்வித்துறை நாட்காட்டியின்படி, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

11, 12 பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி புதன்கிழமை முதல் தொடங்கியது. இந்த நிலையில், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து 28 முதல் அக்டோபர் 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் அதிருப்தி

5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இதற்கு அதிருப்தி தெரிவித்த காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு எழுதிய கடிதத்தில், ” அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

காலாண்டு விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3 அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு, வெள்ளிகிழமை மட்டுமே பள்ளி இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே, அக்டோபர் 3, 4 ஆம் தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்கும்.

ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் கிடைக்கும். எனவே, பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி இருந்தார்.

விடுமுறை நீட்டிப்பு

இந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி அக்டோபர் 6 ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும், அக்டோபர் 7 ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version