Amazing Tamilnadu – Tamil News Updates

‘கிராமப்புற முன்னேற்றம்: இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்!’

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும் காலங்களில் எல்லாம் கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் அரிய பல திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 40 மாத திராவிட மாடல் ஆட்சியில் கிராமப் புறங்களில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்திப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, அது குறித்த முக்கிய திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளில் தகவல் தொழில் நுட்பச் சாதனங்கள்

கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் (UPS) சாதனம் ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

இணையதளம் வாயிலாக அரசுச் சேவைகள்

சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட அனுமதி போன்ற குடிமக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை மக்கள் இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான Vptax Portal நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக இரண்டு கிராமசபைக் கூட்டங்கள்

2022-23 ஆம் ஆண்டிலிருந்து கிராம சபைக் கூட்டங்கள் தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) ஆகிய இரண்டு நாள்களையும் சேர்த்து ஆண்டிற்கு மொத்தம் 6 முறை நடத்தப்படுகிறது.

ஊராட்சி பிரதிநிதிகள் – பொதுமக்களுக்கு உதவிட – உதவி மையம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டும் வழிமுறையாக (155340) என்ற எண்ணுடன் ஓர் உதவி மையம் (Help Desk) இயக்குநரகத்தில் 24X7 என்ற வகையில் முழுநேரம் செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

ஊராட்சிகளுக்கு நிதிவரம்பு அதிகரிப்பு

கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.2 இலட்சம் என்பது ரூ.5 இலட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 இலட்சம் என்பது ரூ.25 இலட்சமாகவும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 இலட்சம் என்பது ரூ.50 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்கூறிய ஒரு இலட்சம் வீடுகளும் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டுமான நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளது.

ஊராட்சிகளின் சிறந்த நிதி நிர்வாகத்திற்கான எளிமைப்படுத்தப்பட்ட கணக்குகள் திட்டம்

ஊராட்சிகளுக்கான மாநில நிதிக் குழு மானியம் மற்றும் சொந்த வருவாய் இனங்களைப் பராமரிக்க ஒற்றை மையக் கணக்கு (SNA) மூலம் சிறந்த நிதி நிர்வாகத்தினைக் கிராம ஊராட்சிகளில் ஏற்படுத்தி வேலைப் பளுவினைக் குறைத்துக் கணக்குகளை எளிதாகப் பராமரித்திடும் பொருட்டு தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுச் செயல்பாட்டில் உள்ளது.

நம்ம கிராமசபை – புதிய செயலி

கிராமசபை நிகழ்வுகளைக் கண்காணித்திட துறையானது “நம்ம கிராம சபை” என்கிற புதிய கைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.

தெருவிளக்குகள், பராமரிப்பில் தானியங்கி முறை

தெருவிளக்குகள் பராமரித்தலில் தானியங்கி முறையினைப் புகுத்திடும் வகையில் இண்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) முறையில் சோதனை முயற்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்காடு ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

2021 முதல் மூன்று ஆண்டுகளிலும் பெண்கள் 86.26 சதவீதத்திற்கும், மாற்றுத் திறனாளிகள் 2,95,664 பேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் 29.59 சதவீதத்தினரும் பயன் பெற்றுள்ளனர்.3 ஆண்டுகளிலும் ரூ.34,609.44 கோடியில் 10 இலட்சத்து 11 ஆயிரத்து 334 குடும்பங்கள் 100 நாள்கள் வேலை செய்து பயன் பெற்றுள்ளனர். இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதன் மூலம் நீடித்த நிலைத்த வளர்ச்சியின் குறிக்கோள்களான பசியின்மை, வறுமையின்மை, பாலின வேறுபாடின்மை, ஆகியவை நம் நாட்டில் எய்தப்படுகிறது.

ஊரகச் சாலைகள் மேம்பாடு

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (MGSMT), பிரதமமந்திரி கிராமச் சாலைத் திட்டம் (PMGSY), தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (TNRRIS) மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் சாலை மேம்பாடு (Peri- Urban) ஆகிய திட்டங்களின் கீழ் (2021 முதல் 2024 வரை), 18,899 கி.மீ நீளமுள்ள 14,262 சாலைப் பணிகள் மற்றும் 83 பாலங்கள் மேற்கொள்ள ரூ.9,030 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 13,733 கி.மீ நீளமுள்ள, 11,460 சாலைகள் மற்றும் 22 பாலங்கள் ரூ. 5219 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.

சமூக நிறுவனங்களுக்கு விருதுத் திட்டம்

சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்களுக்காக (CSR) விருதினைத் திராவிட மாடல் அரசு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நபார்டு – RIDF திட்டம் (NABARD- RIDF), ஊரகப் பகுதி சுகாதாரப் பணியாளர்கள் நலன், மீண்டும் உத்தமர் காந்தி விருது, ஜல் ஜீவன் திட்டம், நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம் (ஊரகம்), , ஊரக வீடு வழங்கும் திட்டங்கள் (Rural Housing), பெரியார் நினைவு சமத்துவபுரம் உட்பட இந்தியாவிற்கே வழிகாட்டும் பல்வேறு மகத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version