தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது புயலாகவே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவித்துள்ளது.
நாளை பிற்பகல் புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 90 கி.மீ வரை காற்று வீசக்கூடும். கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்றால் டிச.2 ஆம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் “ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கத்திவாக்கம் – 6.2 செ.மீ, பேசின் பிரிட்ஜ் – 4.8 செ.மீ., தண்டையார்பேட்டை – 4.4 செ.மீ, திருவொற்றியூர் – 4.4 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
‘அதி கனமழைக்கு வாய்ப்பு’
இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தள பதிவில், “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் 64.8 கி.மீ (35 நாட்ஸ்) இருந்தால் அதனை புயல் எனக் கூறுவோம், தற்போதுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 83 கி.மீ (45 நாட்ஸ்) வரை வலுப்பெற வாய்ப்பு உள்ளது. மேகக் கூட்டங்கள் அடர்த்தியாக உள்ளதாக இன்று பிற்பகல் முதல் மீண்டும் மழையை எதிர்பார்க்கலாம். மரக்காணத்தில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், அது வலு இழந்து விட்டதாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அது நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.