வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்: எந்த மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு!

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது ஏப்ரல் 7 அல்லது 8 தேதிகளில் தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ஏப்ரல் 12 ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஆந்திரா, ஒடிசா வரையிலும் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. கடந்த 3 ஆம் தேதி முதல் 2 ஆவது சுற்று கோடை மழை பெய்து வரும் சூழலில், இடையில் சிறிய இடைவெளிவிட்டு, பின்னர் 3 ஆவது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஏப்ரல் 8 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளையும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளை அடைய கூடும்.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 8 (செவ்வாய்க்கிழமை) முதல் மேலும் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகியவற்றில் ஏப்ரல் 8 முதல் 12 வரை மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யலாம்.
சென்னை மற்றும் வட தமிழகத்தில் லேசான மழை அல்லது பரவலாக மிதமான மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா கடலூர் புதுச்சேரி, சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யும். இரு காற்று இணைவு ஏற்பட்டு ஆந்திராவில் கனமழையாக பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலையை பொறுத்தவரையில் 10 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக உயரவும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.