தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும் ?

தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் பல பகுதிகளில் மழை பெய்து மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்தது. திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் காலை நேரத்தில் மிதமான மழை பதிவானது.
மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் மாலை வரை இடைவெளி விட்டு மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர், அதே சமயம் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சிறிய அளவிலான பாதிப்புகளும் ஏற்பட்டன.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, நேற்று காலை 10 மணி வரை நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதற்கேற்ப, இந்த மாவட்டங்களில் மழை பெய்து மக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக, தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் மாலை நேரத்தில் மழை தொடர்ந்ததாகவும், சில இடங்களில் பலத்த காற்று வீசியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை?

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களும், கடலோரப் பகுதிகளான நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகியவற்றிலும் மழைக்கான சாத்தியம் உள்ளது. இந்த மழை விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் அதே வேளையில், தாழ்வான அதிக மழை பெய்யும் பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.