நெல்லை, சென்னை, டெல்டா மாவட்டங்களில் கொட்டிய மழை … 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று இரவு முதலே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்தது. அதேபோன்று தஞ்சாவூர் டெல்டா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று மழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் மழை
மேலும் சென்னையில் இன்று பகல் 12 மணிக்கு மேல் பல இடங்களில் கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், முடிச்சூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நாளையும் பரவலாக மழைப் பொழிவு இருக்கும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் கனமழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் வேலூரில் திடீர் மழைப் பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் அதை ஒட்டியுள்ள உட்புற மாவட்டங்களிலும் மிதமான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இரு தினங்களுக்குப் பின்னர் மீண்டும் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.