Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழக மழை நிலவரம்… அக். 20 முதல் 22 வரையிலான அப்டேட்!

ங்கக்கடலில் ஏற்கெனவே கடந்த 14 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16 ஆம் தேதி கனமழை பெய்தது.

இதையடுத்து தாழ்வு மண்டலம் கடல் பகுதியில் இருக்கும் போதே, சென்னையில் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஏற்கனவே கணித்தபடி,வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி – நெல்லூர் இடையே நேற்று அதிகாலை கரையைக் கடந்தது. அப்போது மழையும் இல்லை; பலத்த காற்றும் இல்லை.

இந்நிலையில் அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் 22 ஆம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகாவில் மிதமான மழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலங்கானாவில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடகிழக்குப் பருவமழையால் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இதனிடையே திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version