தொடரும் கனமழை: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்… புயலுக்கு வாய்ப்பா?
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, வடதமிழகத்தை, தெற்கு ஆந்திரா ஒட்டிய கடல் பகுதியில் நீடிப்பதால், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையோரம் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, கே.கே.நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், அமைந்தகரை, கிண்டி, அண்ணாசாலை, மயிலாப்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்தது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் தொடர்ச்சியாக மழை பொழிந்ததால் சாலைகளின் ஓரத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போரூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை நேரத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காண முடிந்தது. மழையால் சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை.
விமானங்கள் தாமதம்
இதனிடையே, மழை காரணமாக விமானங்களின் வருகை, புறப்பாட்டிலும் சுமார் அரை மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து மும்பை, டெல்லி செல்லும் விமானங்கள் 40 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 8 செமீ மழை பதிவானது. ஆலந்தூர், மீனம்பாக்கம், அடையாறு, சென்னை விமானநிலையம், நந்தனத்தில் தலா 6, கிண்டி, உத்தண்டி, தரமணி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கத்தில் தலா 5 செமீ மழை பதிவானது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ. வரை மழை பெய்யலாம் என வானிலை மையம் கணித்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர் , ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலாக மாறுமா?
அதே சமயம், காற்றழுத்த தாழ்வு பகுதி கடற்கரையை ஒட்டி நிலவி வருவதால் புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதே வேளையில், இது மிகவும் பலவீனமான மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி என்பதால் அதே நிலையில், கரையைக் கடந்து செல்லும்.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று காலை வரை 256 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. வழக்கமாக இந்தக் காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 259 மி.மீ. எனவே, இது இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை… மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
இதனிடையே கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 17 ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும், கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதும் தயார்படுத்த வேண்டும் என்றும், அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.