தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் தற்போது நிலவுகிறது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் காலை 6 மணி வரை சராசரியாக 2.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6 செ.மீ., அடையாரில் 5 செ.மீ., ஆலந்தூர் மற்றும் பெருங்குடியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை என அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, மழை தொடர்பான அனைத்து புகார்கள், உதவிகளுக்கு 1913 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
விமான சேவை பாதிப்பு
அதே சமயம், சென்னையில் பெய்து வரும் தொடர்மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து டெல்லி மற்றும் மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. அதேபோன்று இண்டிகோ விமானம் ஹைதராபாத் செல்ல 30 நிமிடங்கள் தாமதமானது.
நவ. 17 வரை மழை
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழை தொடரும். தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 17 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதே சமயம்,ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கன மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழையை ஒட்டி சென்னை மாநகராட்சி சார்பில் 329 முகாம்கள் தனியார் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அமைச்சர்கள், மேயர், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் உள்ளனர். மழை நீரை அகற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன” என்று தெரிவித்தார்.