தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி மற்றும் கரூரில் கனமழை பெய்யும். திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும்.
இதற்கிடையில், அக்டோபர் 12 ஆம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் புதிய சூறாவளி சுழற்சி உருவாகக்கூடும், இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை
திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும், கோவை, திருப்பூர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
அக்டோபர் 14 ஆம் தேதிக்குப் பிறகு சென்னையில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். சென்னையில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30-31 டிகிரி செல்சியஸாகவும், 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
இதனிடையே கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி அனுப்பி உள்ள கடிதத்தில், “கன முதல் மிக கனமழை பெய்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர்களை கையாளுவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளார்.