வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி, நவம்பர் 24 ஆம் தேதிக்கு பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 25 ஆம் தேதி புயலாக மாறும். அதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் அதீத மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோடியக்கரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதிகளில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஆனால் தென்கோடியில் நெல்லை, கன்னியாகுமரி இடையே மாஞ்சோலை பகுதிகளில் மழைக்கும் வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி முனை, தூத்துக்குடி, கோடியக்கரை பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். 23 மற்றும் 24 ம் ஆகிய தேதிகளில் காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அப்போது, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 27 ஆம் தேதி வரை நீடிக்கும். இதையடுத்து, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பிறகு அது வலுப்பெறும் போது புயலாக மாற வாய்ப்புள்ளது. அந்த புயல் டெல்டா மாவட்டங்களுக்கு நெருங்கிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அது நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவோ அல்லது திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் வழியாகவோ அல்லது கடலூர்-புதுச்சேரி இடையே கரை கடக்க வாய்ப்புள்ளது. இந்த பகுதிகள் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தாலும் சென்னையில் அதிக மழை பெய்யும். குறிப்பாக 25 முதல் 27 ஆம் தேதி வர அதிக மழை பெய்யத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
ராமநாதபுரம் பாம்பனில் அதிகபட்சமாக 3.5 செ.மீ மழையும், புதுக்கோட்டையில் 2.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், கடலூர், தென்காசியிலும் லேசான சாரல் மழை பெய்தது.