மழையோடு தான் தீபாவளியா..? – வானிலை மையம் அலர்ட்!
தீபாவளியும் பட்டாசையும் எப்படி பிரிக்க முடியாதோ, அப்படிதான் மழையும் போல. கடந்த சில தினங்களுக்கு முன்னர், தீபாவளியன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், நவம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிக்குப் பின்னரே மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால், பொதுமக்களைக் காட்டிலும் வியாபாரிகளே அதிக மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால், நேற்று முதல் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், தீபாவளி அன்றும் மழை இருக்குமோ என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. அதற்கேற்ப இன்று பகல் 12 மணி முதல் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக கோடம்பாக்கம், கொளத்தூர், வியாசர்பாடி, அண்ணாசாலை, கிண்டி, அசோக் நகர், கோயம்பேடு, முகப்பேர், வடபழனி என நகரின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்காக ஊர்களுக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தீபாவளி அன்று மழை வாய்ப்பு
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று புத்தாடை, பட்டாசுகள் விற்பனை காலை முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திடீரென பெய்த மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மழைக்கு கிழக்கு திசையில் இருந்து வந்த மேகங்களே காரணம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தீபாவளி அன்று அதிகாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் உள்ளார்ந்த பகுதிகளிலும் தீபாவளி அன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கணித்துள்ளார். அதேபோன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் தீபாவளி அன்று அதிகாலை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி. அரியலூர் பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.