தமிழகத்தில் 25 புதிய நெடுஞ்சாலைகள்: தயாராகும் திட்ட அறிக்கை!
தமிழ்நாட்டில், 6,600 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலைகள், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பெரிதும் உதவி வருகின்றன.
இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி புறவழிச்சாலை, புதிய தேசிய நெடுஞ்சாலைகள், உயர்மட்ட மேம்பால சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி 2,170 கி.மீ. தூரத்துக்கு 25 புதிய சாலை பணிகளை அடுத்தாண்டு துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிக்கு, 85,515 கோடி ரூபாய் தேவைப்படும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்துப் பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர், “மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பின், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், சாலை பணிகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்க முடியவில்லை. அடுத்த ஐந்து மாதங்களில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
அதை மனதில் வைத்து, தற்போது தமிழ்நாட்டில் 25 புதிய சாலைகளுக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை அடுத்தாண்டு திட்டமிட்டபடி துவங்க, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.
மேற்கூறிய 25 புதிய நெடுஞ்சாலைகள் திட்டத்தில், கிளாம்பாக்கம் – மகேந்திரா சிட்டி ஆறு வழி மேம்பால சாலை, ஶ்ரீபெரும்புதூர் – மதுரவாயல் ஆறு வழி மேம்பால சாலை, விவசாயிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ள சென்னை – சேலம் இடையே எட்டுவழிச்சாலை, தற்போதுள்ள, சென்னை – திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக, சென்னை – திருச்சி – மதுரை பசுமைவழிச்சாலை உள்ளிட்டவை முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.