Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

புதிய புயல் சின்னம்… தமிழகத்தில் மழை வாய்ப்பு!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, மடிப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், மதுரவாயில், போரூர் என நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், நகரில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழையும், தமிழகத்தில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

” வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு இடையேயுள்ள வங்கக்கடலில் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. இது மத்திய ஆந்திராவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் ஒடிசாவில் ஒருசில இடங்களில் இனிவரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 29 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே இன்று முதல் வருகிற 27 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version