“இதுவா கூட்டாட்சி… இதுவா நாகரிகம்..?”

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதி ஒதுக்கப்படாமல் உள்ள நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக திமுக எம்.பி-க்களுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல் நாடு தழுவிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இன்னொரு புறம் தமிழகத்துக்கான உரிய வரிப் பகிர்வை மத்திய அரசு தர மறுப்பதாக குற்றம் சாட்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு விவகாரத்திலும் தமிழகம் 8 மக்களவை தொகுதிகளை இழக்கும் ஆபத்து உள்ளதாக கூறி, அதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த பிரச்னையை மக்கள் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!’ என்ற தலைப்பில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக நேற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியது. அந்த வகையில், திருவள்ளூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பிரதமர் மோடிக்கு கேள்வி
அவர் பேசுகையில், ‘ இன்றைக்கு பிரதமராக இருக்கும் திரு. நரேந்திர மோடி அவர்கள், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சமயத்தில் என்ன சொன்னார்? ‘டெல்லியில் இருந்து இந்தியா முழுமைக்கும் திட்டமிடுவது என்பது அகற்றப்பட்டு, அந்தந்தப் பகுதியில் இருப்பவர் துணையோடு திட்டமிடுவதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும்’ என்று சொன்னார்.
மாநில முதலமைச்சராக நான் அடைந்த பன்னிரண்டு ஆண்டுகால அனுபவத்துடன் தேசியத் தலைமையை ஏற்பதால், மாநிலங்களின் பிரச்னையும் எனக்குத் தெரியும். ஒன்றிய அரசின் முக்கியத்துவமும் எனக்குப் புரியும்” என்று சொன்னீர்களே… சொன்னபடி நடந்து கொண்டீர்களா?

வரி விதிப்பதில் மாநிலங்களுக்கு உரிமை உண்டா? வரிப் பகிர்விலாவது மாநிலங்களிடம் நியாயமாக நடந்து கொண்டீர்களா? திட்டங்களை அறிவிப்பது, செயல்படுத்துவது இதிலாவது மாநிலங்களைப் பாரபட்சமில்லாமல் நடத்துகிறீர்களா? இல்லையே… கூட்டாட்சித் தத்துவத்தை ஆதரிப்பவர் நீங்கள் என்று சொல்வதற்கு ஒரு சாட்சியத்தையாவது காட்ட முடியுமா? பிரச்னை வரும்போது, மாநில முதலமைச்சர்களை அழைத்து என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா? ஆலோசனை நடத்தியிருக்கிறீர்களா? எதுவும் இல்லையே!
‘தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?’
அதுமட்டுமல்ல, கடந்த 06.12.2012 அன்று குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கூறியது ஞாபகம் இருக்கிறதா? ‘குஜராத் மக்கள் 60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள்… ஆனால், திரும்ப வருவது மிகக் குறைவு. குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?’ என்று கேட்டீர்களே… அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன்… ‘தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?’ நாங்கள் உழைத்து – வரியாகச் செலுத்திய பணத்தில் எங்களுக்கான நிதியைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை? 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்கான நிதியை விடுவிக்காமல் மிரட்டுறது நியாயமா? தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள்…
எது அநாகரிகம் ? தர்மேந்திர பிரதானுக்கு கேள்வி
அநாகரிகம் பற்றிப் பேசும் தர்மேந்திர பிரதான் அவர்களே! எது நாகரிகம் என்று உங்களால் சொல்ல முடியுமா? எங்கள் மாநிலத்தில் இருந்து வரியை வசூல் செய்துவிட்டு, எங்களையே பட்டினி போடுவதுதான் நாகரிகமா? ‘தமிழ் பிடிக்கும் – தமிழில் பேச முடியவில்லையே’ என்று சொல்லிக் கொண்டே, தமிழுக்கு நிதி ஒதுக்காமல் சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்குவதுதான் நாகரிகமா? ‘தாய்மொழியை வலியுறுத்துகிறோம்’ என்று சொல்லிக் கொண்டே அதைச் செய்யாமல் சமஸ்கிருதத்தையும் – இந்தியையும் திணிப்பதுதான் நாகரிகமா?

குஜராத்தில் இயற்கைப் பேரிடர் வந்தால், அன்று மாலையே 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதும் – தமிழ்நாட்டில் பேரிடர் வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காடு நிதிகூட ஒதுக்காமல் இருப்பதுதான் நாகரிகமா?
ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் அறிவித்துவிட்டு, ஏழு ஆண்டுகாலமாக அதைக் கட்டாமல் ஏமாத்துவதுதான் நாகரிகமா? நாகரிகத்தைப் பற்றி யார் பேசுவது? அநாகரிகத்தின் அடையாளமே நீங்கள்தான்! அநாகரிகத்தையே அராஜகமாகப் பயன்படுத்துவது நீங்கள்தான்! இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நிதி தர மாட்டோம் என்று சொல்வதைவிட அராஜகம் இருக்க முடியுமா?
‘ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்’
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அராஜகவாதிகள் என்று சொன்ன தர்மேந்திர பிரதானை, அரை மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார்கள் நம்முடைய தமிழ்நாட்டு எம்.பி.க்கள். இந்தப் போர்க்குணத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து வரும் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கச் சதி செய்கிறார்கள்.தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி, தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

தொகுதி மறுசீரமைப்பில் பாதிக்கப்படவுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்த்து, கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க இருக்கிறோம். பல்வேறு மாநிலக் கட்சிகளும் இணைந்து எடுக்கும் முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நாம் எடுப்போம். நிதி தரமாட்டோம் – அதிகாரத்தைப் பறிப்போம் – இதைக் கேள்வி கேட்டால், தொகுதி எண்ணிக்கையைக் குறைப்போம் என்ற அளவுக்கு எதேச்சாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறது, பாஜக.
உறுதியோடு சொல்கிறேன்! பாஜக-வின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பாஜக-வின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்” எனத் தெரிவித்தார்.