Amazing Tamilnadu – Tamil News Updates

அரசுத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த புதிய கண்காணிப்பு அதிகாரிகள்!

மிழகத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அரசின் பல்வேறு திட்டப்பணிகளை கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2019 டிசம்பர் 3 ஆம் தேதி, இந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட அரசாணைகளின் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த அதிகாரிகள் அனைவரையும் மாற்றிவிட்டு, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையால் அவ்வப்போது வழங்கப்படும் உத்தரவுகளை செயல்படுத்தும் வகையில், புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், சென்னை மாவட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்குநர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலர் முருகானந்தம்

இதுதவிர, ராணிப்பேட்டை- தொழில்துறை சிறப்புச் செயலர் மரியம் பல்லவி பல்தேவ், சேலம்- சுற்றுலாத்துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, சிவகங்கை- மீன்வளத்துறை இயக்குநர் ஆர்.கஜலட்சுமி, தென்காசி- தமிழ்நாடு பாடநூல்கழக மேலாண் இயக்குநர் பி.சங்கர், தஞ்சாவூர்- தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண் இயக்குநர் எம்.அரவிந்த்,

நீலகிரி- ஆவின் மேலாண் இயக்குநர் எஸ்.வினீத், தேனி- போக்குவரத்துத்துறை சிறப்புச் செயலர் ஆர்.லில்லி, தூத்துக்குடி- வேளாண் விற்பனை துறை ஆணையர் ஜி.பிரகாஷ், திருச்சிராப்பள்ளி- தொழில் வழிகாட்டி நிறுவன மோலண் இயக்குநர் வி.விஷ்ணு, திருநெல்வேலி- டிட்கோ மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாதம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும், கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version