தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? – அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டுள்ளது.
அமைதியாக நடந்த மத விழாக்கள்
சட்டம் ஒழுங்கை தொடர்ந்து காப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி வந்துள்ளது. 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்னையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியது. அதற்காக அந்தப் பகுதி மக்கள் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிப் பாராட்டினார்கள்.
40 இலட்சம் பேர் கூடிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, 2 இலட்சம்பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா, 8 இலட்சம் பேர் திரண்ட திருச்செந்தூர் சூரசம்ஹாரம், 5 இலட்சம் பேர் கூடிய பழனி தைப் பூசத் திருவிழா, 12 இலட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா, 3 இலட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா, 20,000 பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது நமது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாகப் பராமரிக்கப்படுவதன் அடையாளமாகும்.
காவல் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை
இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால்தான். கொரோனா தொற்றுத் தடுப்பில் களப்பணியாற்றிய 1.17 லட்சம் காவல் துறையினருக்கு ஊக்கத்தொகையாகத் தலா ரூ.5,000 வீதம் 58.50 கோடி ரூபாய் வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
58 புதிய மகளிர் காவல் நிலையங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட அனைத்துக் காவல் உட்கோட்டங்களிலும் 39 புதிய மகளிர் காவல் நிலையங்களையும் கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உள்ளிட்ட 19 இடங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்களையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காவலர் குடியிருப்புகள்
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை 4.1.2024 அன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். 481.92 கோடி ரூபாய்ச் செலவில் 2,882 காவல்துறை வாடகைக் குடியிருப்புகள் 42.88 கோடி ரூபாய்ச் செலவில் 42 காவல் நிலையங்கள், 84.53 கோடி ரூபாய்ச் செலவில் 14 இதர காவல் துறை கட்டடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
காவல்துறைக்கு புதிய வாகனங்கள்
22.1.2024 அன்று சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டுக்காக 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா, 20 பொலிரோ ஜீப் வாகனங்கள் வழங்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.
தீயணைப்பு துறைக்கு நவீன வாகனங்கள், உபகரணங்கள்
2021 முதல் 2023 முடிய இத்துறைப் பணியாளர்கள் 61,288 தீ விபத்து அழைப்புகளிலும், 2,57,209 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி 42,224 மனித உயிர்களையும், ரூ.605.06 கோடி மதிப்புள்ள உடைமைகளையும் காப்பாற்றி அரும்பணி புரிந்துள்ளனர். தீயணைப்புப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ரூ.55.62 கோடி செலவில் தலைக்கவசம் மற்றும் காலணியுடன் கூடிய 1850 தீ பாதுகாப்பு உடைகள், 650 மூச்சுக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய 3500 மீட்பு உடைகள் வாங்கிட முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இவற்றின் வாயிலாக – தமிழ்நாட்டின் காவல்துறை – சிறைத்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் அனைத்தும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சீர்மிகு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிப்படுகிறது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.