தமிழகத்தில் 136 நகரங்களை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’… சென்னையைச் சுற்றி புதுநகர் வளர்ச்சித் திட்டம்!

இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’ ( CREDAI) சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெறும் வீட்டுவசதி கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும்” என அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மையங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
புதுநகர் திட்டங்களின் நோக்கம் சென்னையின் நெரிசலை குறைக்க வேண்டும், பொருளாதார மையங்களை உருவாக்க வேண்டும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் இதுதான் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில், இப்படிப்பட்ட திட்டங்கள் தயாரிக்கும் பணி தேக்கமடைந்து இருந்தது. அந்த நிலையை மாற்ற அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

சென்னையின் உட்பகுதிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து முனையங்களை பரவலாக்கவும் சி.எம்.டி.ஏ மூலமாக கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்களை உருவாக்கியிருக்கிறோம். குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. சென்னை பெருநகர மண்டல போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கான இலக்கை அடைகின்ற வகையில் செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது.
சென்னையின் நீண்ட கடற்கரை பகுதியும், ஏரிகளும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பெரும் கொடைகள் இதை மேம்படுத்த, தமிழ்நாடு அரசால் சென்னை நீர்முனைய வளர்ச்சி திட்ட நிறுவனம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனம், முதற்கட்டமாக, சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள் மற்றும் 4 கடற்கரைப் பகுதிகளை தேர்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த ரூ.250 கோடி செலவில் திட்டம் தயாரித்திருக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் 196 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என மேலும் தெரிவித்தார்.