“வீடுகளுக்கு ரூ.200 கட்டணத்தில் இணையதள சேவை” – மாணவர்களுக்கு வரப்பிரசாதம்!

தமிழ்நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் தனது துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, வீடுகளுக்கு மாதம் ரூ.200 என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் 100 Mbps வேகத்தில் உயர்தர இணைய சேவை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANFINET) மூலம் 12,525 கிராமங்களை 1 Gbps வேக இணையத்துடன் இணைக்கும் திட்டம் வேகமாக முன்னேறி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதற்காக 57,500 கி.மீ. நீளமுள்ள ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. முந்தைய அதிமுக ஆட்சியில் தாமதமடைந்த இத்திட்டம், தற்போதைய திமுக ஆட்சியில் வேகம் பெற்றுள்ளதாகவும், 93% பணிகள் முடிவடைந்து 11,639 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இந்த முயற்சி, குறிப்பாக கல்வி நோக்கங்களுக்காக உயர்வேக இணைய அணுகலை உறுதி செய்வதன் மூலம் சமூக நீதியை மேம்படுத்துவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. கல்வி வளங்கள் மற்றும் திட்டங்கள் ஆன்லைனில் அதிகரித்து வருவதால், அனைவருக்கும் சமமான அறிவு அணுகலை உறுதி செய்ய இது உதவும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ” 4,700 பஞ்சாயத்துகள் கடைசி மைல் இணைப்பு (last-mile connectivity)கோரியுள்ளன. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போன்று ஃபிரான்சைஸி (Franchise ) மாதிரியை அறிமுகப்படுத்தி 100 Mbps இணைய இணைப்பை வீடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முன்னர் பல சிக்கல்களை எதிர்கொண்ட TACTV சேவை, அடுத்த மூன்று மாதங்களில் மேம்படுத்தப்பட்டு, HD செட்-டாப் பாக்ஸ்கள் அறிமுகப்படுத்தப்படும்.
முந்தைய ஆட்சியில் 7,000 ஆக இருந்த இ-சேவை மையங்களின் எண்ணிக்கை தற்போது 28,000 ஆக உயர்ந்துள்ளது.இதனால், கிராமப்புறங்களில் இ-ஆளுமை சேவைகளுக்கு 2-3 கி.மீ.க்கு மேல் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. நகர்ப்புறங்களில் 1 கி.மீ.க்குள் அணுகல் இருக்கும்” எனவும் அவர் கூறினார்.
இ-சேவை மையங்கள் மூலம் பேருந்து டிக்கெட் சேவை
அத்துடன், பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு மற்றொரு முக்கிய அறிவிப்பாக, ” இ-சேவை மையங்கள் மூலம் ஒரு வாரத்திற்குள் ஆன்லைன் பேருந்து டிக்கெட் சேவை தொடங்கப்படும். கிராமப்புற மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை எளிதாக்குவதற்கு இது உதவும்” என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.