மத்திய அமைச்சர் சொன்ன ‘அந்த வார்த்தை’… கொந்தளித்த தமிழக எம்.பி-க்கள்… நடந்தது என்ன?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் , ” பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இந்த நிதியை பெற்றுள்ளன. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. மாநிலங்களை பழிவாங்க பள்ளி மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சரியா? மத்திய அரசின் இந்தச் செயல், பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. எனவே, கட்டாயமற்ற மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றாததால், நிதி வழங்க மறுப்பது கூடாது. எந்த ஒரு மாநிலமும் இதுபோல் நிதி இழப்பை சந்திக்காத நிலையை மத்திய அரசு உருவாக்குமா?” எனக் கேட்டார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்ன வார்த்தை
அப்போது பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு பிறகு யு டர்ன் அடித்துவிட்டது. தமிழக அரசை பொறுத்தவரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை; நேர்மையாக இல்லை; ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அவர்கள் நல்ல நாகரிகத்தில் இல்லை. அவர்கள் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். தற்போது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்படி செயல்படுகிறார்கள். மொழியை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்” என்றார்.
அவரது இந்த பதிலை ஏற்க மறுத்து திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து ஆவேசமடைந்த தர்மேந்திர பிரதான், “தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அநாகரிகமானவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்” என அவமதித்து பேசினார்.

தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு
இதற்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆதரித்ததாக தர்மேந்திர பிரதான் திசைதிருப்பும் விதமாக பேசி வருகிறார். இன்று நான் வலியோடு இருக்கிறேன். அமைச்சரின் பதில் வலியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு, தமிழக எம்பிக்கள், தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என அமைச்சர் கூறி இருக்கிறார். தமிழக எம்பிக்கள் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை” எனத் தெரிவித்தார்.
கனிமொழியின் உரைக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘ தமிழக அரசை, தமிழக எம்பிக்களை, தமிழக மக்களை நாகரிகமற்றவர்கள் என நான் கூறினேன் என கனிமொழி கூறினார். நான் அவ்வாறு கூறவில்லை. எனினும், நான் எனது அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். நான் பேசியது எவரது மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் எனது அந்த வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்த நிலையில், தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வர தனது சமூகவலைத்தள பதிவில், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? நீங்கள் தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா ?

NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!” என்று கூறியுள்ளார்.