“புலம்பெயர் தொழிலாளர்களால் தமிழகத்தில் பணவீக்கம்” – SBI ஆய்வறிக்கை சொல்வது என்ன?

குறைந்த வருமானம் உள்ள மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளா போன்ற அதிக வருமானம் உள்ள தென் மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தேடி புலம்பெயர்ந்து வருவதினால் ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தாலும், அது பணவீக்கத்தையும் அதிகரிக்க வைப்பதாக எஸ்பிஐ (State Bank Of India – SBI) ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில், கடந்த 13 ஆண்டுகளில் (FY13-FY25), 9 ஆண்டுகள் இந்திய சராசரி பணவீக்கத்தை விட உயர்ந்த பணவீக்கம் பதிவாகியுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதார நிலையை பிரதிபலிக்கிறது. காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றின் விலைகள் தென் மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
புலம்பெயர்வு – பணவீக்கத்திற்கு இடையிலான தொடர்பு
SBI அறிக்கையின்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அதிகரிப்பு தமிழ்நாட்டில் வாங்கும் சக்தியை உயர்த்துகிறது. இது உணவு பணவீக்கத்தை தூண்டுகிறது. உயர் வருமான மாநிலங்களில் உணவு பணவீக்கத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) 5.26% ஆக உள்ளது. இது, தேசிய சராசரியான 5.18% ஐ விட அதிகம். மாறாக, குறைந்த வருமான மாநிலங்களில் இது 4.95% மட்டுமே. பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொழிலாளர்கள் கட்டுமானம், தொழிற்சாலைகள், சேவைத்துறைகளில் பணியாற்றுகின்றனர். இதனால், உள்ளூர் தேவை அதிகரித்து விலைகள் உயர்கின்றன.

தமிழ்நாட்டின் வரி மற்றும் பொருளாதாரக் காரணிகள்
” தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பெட்ரோல், டீசல், மதுபானங்கள் மீதான வரி மற்றும் வாகனங்கள், சொத்து பதிவுக்கான கட்டணங்களை அதிகமாக விதிக்கின்றன. இதுவும் பணவீக்கத்திற்கு ஒரு காரணமாக உள்ளது. மாநில விற்பனை வரி வசூலில் தென் மாநிலங்கள் 30% பங்கு வகிக்கின்றன. இது வட மாநிலங்களை விட அதிகம். உதாரணமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2025 பிப்ரவரியில் ரூ.102 ஆக உள்ளது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்துகிறது” என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த…
வடகிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பணவீக்கம் குறைவாக உள்ளது. 2025 பிப்ரவரியில் கேரளாவில் 7.3% பணவீக்கம் பதிவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இதே போன்ற உயர்வு காணப்படுகிறது. குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள், 9 ஆண்டுகள் தேசிய சராசரியை விட குறைவான பணவீக்கத்தை பதிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் கிராமப்புற பணவீக்கம் (54.2% உணவு எடை) நகர்ப்புறத்தை (36.3%) விட அதிகமாக உள்ளது. இது உணவு விலை உயர்வை சுட்டிக்காட்டுகிறது.

SBI கணிப்பின்படி, 2025 ஆம் நிதியாண்டில் இந்திய பணவீக்கம் 4.7% ஆகவும், 2026-ல் 4.0-4.2% ஆகவும் இருக்கலாம். இந்த நிலையில், “தமிழ்நாட்டில் புலம்பெயர்வை சமநிலைப்படுத்த, உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும், வரி சுமையை குறைப்பது பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.
தமிழ்நாட்டிற்கு புலம்பெயரும் தொழிலாளர்கள் பொருளாதார வளர்ச்சியை தூண்டினாலும், பணவீக்கம் ஒரு சவாலாக உள்ளது. இதை சமாளிக்க அரசு திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.