தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை… ஆரஞ்சு எச்சரிக்கை!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கமான சராசரி அளவை விட அதிகமாகவே பெய்து வருகிறது. ஜூன் 1 முதல் வழக்கமாக 8.3 செ.மீ.க்கு அளவுக்கே மழை பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 16 செ.மீ. அளவுக்குப் பெய்துள்ளது. வால்பாறை (3 செ.மீ.), வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரம் (2 செ.மீ.), உதகமண்டலம் (1 செ.மீ.) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மழை பெய்தது. கடலூர், சென்னை, பழனி, கள்ளக்குறிச்சி, ஆரணி உள்ளிட்ட இடங்களிலும் இலேசான மழை பெய்தது.
வளிமண்டலத்தில் ஈரப்பதம்
அதேபோன்று மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக. மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வளிமண்டலத்தில் ஈரப்பதம் இருப்பதால், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வட தமிழகம் மற்றும் சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் இதமான வானிலை நிலவும். நாளை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் கனமழை
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கேரளா, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கர்நாடகாவில் ஒரு சில பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆரஞ்சு எச்சரிக்கை’
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.