தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்… சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்கள் என்ன?

குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்று சுழற்சி மாலத்தீவு கடற்கரை பகுதியில் நகர்ந்தது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசானது முதல் கனமழை வரை பெய்து வந்தது. இதற்கிடையே இந்த காற்று சுழற்சி அகன்று செல்வதால் வறண்ட கிழக்கு காற்றின் ஊடுருவல் தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது. இதனால் கடல் காற்றின் ஊடுருவல் முற்றிலும் தடைபட்டு வருகிறது.
இதன் காரணமாக, மார்ச் மாத தொடக்கத்திலேயே அனல் காற்று வீசும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலூர், ஈரோடு, கரூர் மற்றும் பரமத்தி போன்ற இடங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் 28.63 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்…
” பொதுமக்கள் நிறைய தண்ணீர் குடிக்கவும். எலுமிச்சை ஜூஸ், மோர் அல்லது லஸ்ஸி போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களையும், ஒரு சிட்டிகை உப்புடன் பழச்சாறுகளையும் உட்கொள்ள வேண்டும். நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பதைத் தவிர, நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
நன்கு காற்றோட்டமான மற்றும் குளிர்ந்த பகுதிகளில் வீட்டிற்குள் இருங்கள். பகலில் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்கவும். இதய நோய்கள் உள்ளவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வெளிப்புறத் தொழிலாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்கள் ஆகியோர் மீது கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். தனியாக வசிக்கும் முதியவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

மேலும், திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும், உச்சக்கட்ட வெப்ப நேரங்களில் கடுமையான உடல் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். நிழல் அல்லது குளிர்ந்த பகுதிகளில் அடிக்கடி ஓய்வெடுக்கவும். நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் தண்ணீர் குடிக்கவும். பணியிடங்களில் சரியான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யவும். தலைச்சுற்றல், தலைவலி அல்லது வெப்ப அழுத்தத்தின் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மது, தேநீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை பானங்கள், அதிக புரதம் அல்லது பழைய உணவுகளை உட்கொள்ளக்கூடாது. நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்; ஏனெனில் உள்ளே வெப்பநிலை ஆபத்தான அளவுக்கு அதிகமாகிவிடும்” என அறிவுறுத்தி உள்ளது.