தமிழ்நாட்டின் பல பகுதிகளுடன் சேர்ந்து வேலூரில் வெப்பநிலை 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக உயர்ந்து வருவதால் கடுமையான வெப்ப அலை பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர், கரூர் பரமத்தி, சென்னை, ஈரோடு மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களிலும் வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
மார்ச் 14 அன்று தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்ப நிலையாக வேலூரில் 38.6 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை பதிவான நிலையில், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, இன்று வட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கடுமையான வெப்பம் மற்றும் அசௌகரியமான வானிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி வரை வெப்ப நிலை இயல்பை விட அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: இன்று மற்றும் நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.