தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்… குறைவது எப்போது?

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத கடைசியில் இருந்தே வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் வெயிலின் உள்ள தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடி யாத அளவுக்கு சூரியன் சுட் டெரித்தது. அந்தவகையில் ஈரோட்டில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), கரூர் 102.2 டிகிரி (39 செல்சியஸ்), மதுரை 101.48 டிகிரி (38.6செல்சியஸ்), சேலம் 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), திருப்பத்தூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), திருச்சி 100.04 டிகிரி (37.8செல்சியஸ்), வேலூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) என மொத்தம் 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நாட்களில்வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன் பிறகு வெப்ப மண்டல காற்று குவிதல் வடக்கு நோக்கி நகர்ந்து கோடை மழை கொடுக்கும் என்பதால் வெப்பம் சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே வருகிற 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் இலங்கைக்கு தெற்கே குமரிக்கடல் வழியாக நிலவ இருக்கும் காற்று சுழற்சி காரணமாக டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் பரவலாக மழைக்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அந்த நாட்களில் மட்டும் வெப்பம் குறைந்து காணப்படும்.
தமிழ்நாட்டில் தற்போதைய வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி வரை அதிகரித்து காணப்படுகிறது. எனினும், வரும் நாட்களில் இது 4.5 டிகிரி முதல் 6.5 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.