நான்கு அரசு மருத்துவமனைகளில் வருகிறது புதிய பல் மருத்துவ மையங்கள்!
மதுரை, சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் புதிதாக பன்னோக்கு பல் மருத்துவ மையங்கள் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மருத்துவத்துறை, பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது முன்னணியில் இருக்கிறது. பொது மருத்துவம் போலவே பல்மருத்துவத்தையும் மேம்படுத்தவும், பல்மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒரு சில மாதங்களுக்கு முன், புதுக்கோட்டையில் புதிதாக ஒரு அரசு பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. அதே போல், சமீபத்தில் சென்னையில் உள்ள பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தளங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த வரிசையில், தற்போது நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக பல்மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இது தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், புதிய பல்மருத்துவ மையங்கள் அமைக்க 1 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படும் எனவும், அந்த மருத்துவ மையங்களுக்கு பல் மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 கோடியே 45 லட்ச ரூபாய் செலவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.