அனைத்து துறையிலும் முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு தொடரும்… அரசாணை நிறுத்தம்!

மிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளுக்கான ( MD)மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்திட ஒதுக்கீட்டின் கீழ், எம்.டி. – எம்.எஸ். படிப்புகளில் அரசு டாக்டர்கள், தாங்கள் விரும்பும் துறைகளைத் தேர்வு செய்து படித்து, மீண்டும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.

50% இட ஒதுக்கீட்டில் மாற்றம்

இந்த நிலையில், 2024 – 25 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டில் சேருவோருக்கு, இனி பொது மருத்துவம், பொது அறுவை மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மயக்கவியல் மருத்துவம், நெஞ்சக மருத்துவம், ஊடுகதிரியல் மருத்துவம், சமூக மருத்துவம், தடயவியல் மருத்துவம் ஆகிய 10 முதுநிலை படிப்புகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும், மீதமுள்ள மருத்துவ மேற்படிப்புகளில் 2024 – 25 ஆம் ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாது என்றும் தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டிருந்தது.

மேலும், இனி வரும் ஆண்டுகளில் தேவைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், இட ஒதுக்கீடு வழங்கப்படும் துறைகளில் கூட, 50% ஒதுக்கீடு செய்யாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. தமிழக அரசு மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட துறை மருத்துவர்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பதால், அத்துறைகளில் மட்டும் அரசு மருத்துவர் ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.

அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு

இதனால், காது – மூக்கு – தொண்டை, தோல், கண், மனநலம், சர்க்கரை அவசர மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு மருத்துவர்கள் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு, மருத்துவர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

“இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற திறமையான மருத்துவ வல்லுனர்கள் இல்லாத நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டும் திறமையான வல்லுனர்கள் அதிக அளவில் இருப்பதற்கு காரணம் 50 சதவீத அரசு மருத்துவர்கள் ஒதுக்கீடு தான் காரணம்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருப்பதாகக் கூறி, இந்த ஒதுக்கீடு நிறுத்தப்பட்டால், அரசு மருத்துவமனைகளுக்கு பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படும் போது, உடனடியாக அந்த மருத்துவர்களை உருவாக்க முடியாது. எனவே, அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு தடையில்லாமல் தொடர வேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

அரசாணை நிறுத்தம்

இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டில், 10 துறைகளில் மட்டுமே சேர முடியும் என்ற அரசாணை 151 ஐ, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவர்கள் சங்கங்களும், மருத்துவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீடு வழக்கம்போல் தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. vanderpump rules reunion snark and highlights for 5/24/2023. Flag is racist | fox news.