பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், பள்ளிக்கு சுற்றுச் சுவர் மற்றும் இருக்கை வசதிகள், ஆய்வுக்கூட உபகரணங்கள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதில் 85 சதவீத நிதி நபார்டு வங்கியும், 15 சதவீத நிதி அரசும் பங்களிப்பாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை மனித வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் மேற்கண்ட திட்ட குறித்த அறிக்கையையும் குறிப்பிட்டு இருந்தார். அதில் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த ரூ.74 ஆயிரத்து 527 லட்சம் நிதி தேவைப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
அதன்படி மேற்கண்ட அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 440 பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டியுள்ளது என்றும், அதற்காக ரூ 74 ஆயிரத்து 527 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் அரசிடம் கேட்டிருந்தார்.
இயக்குநரின் கடிதத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு, 745 கோடியே 27 லட்சத்து 47 ஆயிரம் நிதியை 440 பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஒப்புதல் அளித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி அரசாணை பிறப்பித்துள்ளார்.