தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதற்கான படிவங்கள் 6, 6 பி, 7, 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
https://voters.eci.gov.in என்ற இணையதளம், ‘VOTER HELPLINE’ என்ற கைபேசி செயலி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025 ஜனவரி 6 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அக்டோபர் 24 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்த பணிகள் தொடங்குகிறது.
வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம்
இதனிடையே தமிழக அரசால், 09.11.2024 அன்று பணிநாளாக அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம், சிறப்பு முகாம் தேதிகளை 09.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை)–க்கு பதிலாக, 16.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளாக மாற்றியமைத்து அறிவித்துள்ளது.