தமிழ்நாடு, 2024-25 ஆம் ஆண்டில் 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, இந்த வெற்றிக்கு அடித்தளமிட்ட திட்டங்கள் என்னென்ன என்பதையும் விளக்கி உள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுப்படி, 2011-12 விலை அடிப்படையில் 2023-24 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.17.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இயல்பான வளர்ச்சி வீதத்தில் 14.02% அடைந்து, தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
2017-18 இல் 8.59% வளர்ச்சி வீதம் பதிவானது முந்தைய உச்சமாக இருந்தது. ஆனால், 2020-21 இல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் 0.07% ஆக குறைந்தபோதும், பல மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியை சந்தித்த நிலையில், தமிழ்நாடு நேர்மறையான வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த சாதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 முதல் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000, தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.1,000, இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1,000 என பல்வேறு நிதி உதவித் திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கலைஞர் கனவு இல்லம், இன்னுயிர் காப்போம், நான் முதல்வன், ஊட்டச்சத்து உறுதி திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாடு, முதல்வரின் முகவரி ஆகிய திட்டங்கள் மாநிலத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு வலு சேர்த்துள்ளன.

முதலீட்டு ஊக்குவிப்பு மூலம் 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.10.14 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 32.04 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்நாட்டை தொழில் மையமாகவும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுதாரணமாகவும் மாற்றியுள்ளன. ஐ.நா. அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் பாராட்டப்பட்ட இந்த திட்டங்கள், மக்களின் நம்பிக்கையை வென்று, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணியில் நிலைநிறுத்தியுள்ளன.
இந்த வெற்றி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்து, மாநிலத்தின் பொருளாதார எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்குகிறது. முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி, தமிழ்நாட்டை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை எனத் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.