போதைப் பொருட்கள் தடுப்பில் தீவிரம் காட்டும் தமிழ்நாடு காவல்துறை!
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக சமீப தினங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், போதைப் பொருள் தொடர்பான விவகாரத்தில் சிக்கியதால் அந்தப் பரபரப்பு கூடியுள்ளது.
டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் ஜாபர் சாதிக், சூட்டோ பெட்டரின் எனும் போதைப் பொருளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததைக் கண்டுபிடித்தனர். ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் பரவின. உண்மை என்ன?
கடந்த 2022ம் ஆண்டில் இருந்தே போலீசார் போதைப் பொருட்களைத் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 28 ஆயிரம் கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 2019 ஆம் ஆண்டு இதே போல தொடர்ந்த நடவடிக்கையோடு ஒப்பிடும்போது, இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட அளவு 154 சதவீதம் அதிகம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
2023 ஆம் ஆண்டில் 15 ஆயிரம் பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 ஆயிரம் கிலோ கஞ்சா, 0.953 கிலோ கிராம் ஹெராயின், சுமார் 40 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆண்டிலும் ஜனவரி மாதக் கணக்கின் படி, 2 ஆயிரம் கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 8 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தொடர்ந்து போதைத் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் தமிழ்நாட்டில் சுத்தமாகக் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் போதை ஆசாமிகளும் கடத்தல்கார்களும் நூதனமான மற்றொரு வழியைக் கையாண்டனர். சில மாத்திரைகளைப் போதைக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத மாத்திரைகளைக் கட்டுப்படுத்தவும், அவற்றைக் கண்டறியவுமான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதன் விளைவாக, 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 1 லட்சம் போதைக்குப் பயன்படும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ள மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப் பொருள் கடத்தல் ஆசாமிகளின் சொத்துக்களையும் அரசு முடக்கியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அவ்வாறு முடக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பு 18 கோடியே 44 லட்ச ரூபாய் ஆகும். போதைப் பொருள் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டில் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த, தினேஷ் குமார் என்பவரை தமிழ்நாடு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்குத் தகவல் வர, உடனடியாக அதிரடியில் இறங்கினர்.
சிலரைக் கைது செய்து விசாரித்ததில், குஜராத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர்தான் இதற்கெல்லாம் முக்கியமான காரணம் என்றும், அவர்தான் குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு போதை மாத்திரைகளைக் கடத்துகிறார் என்றும் தெரியவந்தது. ஈரோட்டில் இருந்த அவரை போலீசார் தேடுவது தெரிந்ததும் அகமதாபாத்துக்குத் தப்பி ஓடினார். இதை அறிந்த போலீசார் விமானம் மூலம் குஜராத் சென்று ,அங்கு பதுங்கி இருந்த தினேஷ் குமாரைக் கைது செய்தனர். தினேஷ்குமாரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்ததுதான் ஹைலைட்.
இப்படி சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டு வரும் அதே நேரத்தில், கண்ணுக்குத் தெரியாமல் போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவினால், அதற்கு நமது பள்ளி மாணவ மாணவிகளும் இளைஞர்களும் பலியாகாமல் இருக்க போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், ‘எனக்கு வேண்டாம்’ என்ற பெயரில் போதை பொருட்கள் எதிர்ப்பு உறுதி மொழி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 74 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகளை போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க வைத்தார் முதலமைச்சர். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை எதிர்ப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள், மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் தீங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.